கே.எஸ்.பாரத் வேண்டாம்.. இவரை போட்டால் இன்னும் நல்லா இருக்கும்.. முன்னாள் தேர்வாளர் கருத்து!!

பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள ரிஷப் பண்ட் அதற்கு முன்பு குணமடைய வாய்ப்பில்லை என்பதால், இந்திய அணி புதிய விக்கெட் கீப்பர்-பேட்டரைத் தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார் ரிஷப் பண்ட். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் குணமடைய 3 முதல் 6 மாதங்களாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய தேர்வாளர் சபா கரீம், ஆஸி.க்கு எதிராக இந்தியாவில் நடக்கும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்டிற்கு பதிலாக கே.எஸ். பாரத் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், தன்னைப் பொறுத்தவரை இஷான் கிஷன் தான் சரியான மாற்று என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “கே.எஸ்.பாரத் டெஸ்ட் கீப்பிங்கிற்காக சரியாக மெருகூட்டப்படுகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவருக்குரிய அனைத்து மரியாதையுடனும், டெஸ்ட் அணியில் பண்ட் விளையாடிய விதத்தை கருத்தில் கொண்டு, இஷான் கிஷான் பண்ட்க்கு சிறந்த மாற்றாக மிகவும் பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன். அவர் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார். விரைவான வேகத்தில் சதம் அடித்துள்ளார்.” என்று கூறினார்.
"பண்டின் முன்னிலையில் நாம் டெஸ்டுகளை வென்றோம், ஏனென்றால் அவர் மேட்ச்-வின்னிங் நாக்ஸை விளையாடினார். அதே சமயம் அவற்றை விரைவான வேகத்தில் செய்தார். இது எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்தது. அதே நேரத்தில் பந்துவீச்சாளர்களுக்கு 20 விக்கெட்டுகளை எடுக்க நேரம் கிடைத்தது. கிஷன் இந்தியா ஏ அணிக்காக ரெட்-பால் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆனால் அவர் சில ஆண்டுகளாக உள்நாட்டு ரெட்-பால் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இஷான் கிஷன் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் வழக்கமான இடத்தைப் பெற்றதாகத் தெரிகிறது. கடந்த மாதம் சட்டோகிராமில் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து அதிவேக இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் நாளை தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இஷான் இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.