ஐபிஎல் 2023 : மீண்டும் களத்தில் இறங்கிய தல தோனி..! ரசிகர்கள் ஆர்வத்தில் கொண்டாட்டம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 19, 2023 & 18:30 [IST]

Share

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை தாங்கும் கேப்டன் கூல் என்று அழைக்க படும் மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் தொடருக்காக மீண்டும் தனது பயிற்சியில் இறங்கியுள்ளார்,இந்த செய்தி இணையத்தில் பரவி சென்னை அணியின் ரசிகர்கள் இடத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது, இதற்கு முக்கிய காரணம் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தான் என்று கூறினால் மிகையில்லை. சென்னை அணி ஐபிஎல் தொடரில் பல வெற்றிகளை பெற்று  முடிசூடா மன்னனாக திகழ்வதற்கு முக்கிய காரணம் தோனி தான்.

இந்நிலையில் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆகஸ்ட் 15 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார், அதன்பின் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் பொழுது தான் தோனியின் பேட்டிங்கை  காண முடிகிறது. சென்னை அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தால்  பல வெற்றிகளை பெற்று தந்த தோனி சமீப காலமாக சரியான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாமல் உள்ளார்.

இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடர் தான் தோனி பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்ற கருத்து பரவலாக இணையத்தில் பரவி வருகிறது, அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக பல ஐசிசி கோப்பைகள் பெற்று தந்த தோனி யாரும் எதிர்பாராத நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள்  கோப்பையை கைப்பற்றி அணியின் கேப்டன் தோனிக்கு பிரியாவிடை அளிப்பார்கள்  என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள், இதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக தோனி தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்னும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க மூன்று மாதங்களே  உள்ள நிலையில் கடைசியாக சென்னை அணி 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது, இந்நிலையில் அணியின் வெற்றிக்காக தலைவனே களத்தில் இறங்கி விட்டேன் என்று சென்னை அணியின் ரசிகர்கள் இணையத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் ஆதரவையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.