ரஞ்சி கோப்பை தொடரில் செதேஷ்வர் புஜாரா புதிய மைல்கல்லை எட்டினார்..! ரசிகர்கள் பாராட்டு ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 20, 2023 & 15:24 [IST]

Share

இந்திய டெஸ்ட் அணியின் தூணாக சமீப காலத்தில் கலக்கி வரும் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் புஜாரா ஒரு மகத்தான சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த டிராவிட் என்று போற்றப்படும் செதேஷ்வர் புஜாரா அதற்கு ஏற்றாற்போல் பல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக புஜாரா விளையாடி வருகிறார், இதில் சௌராஷ்டிரா மற்றும் ஆந்திரா அணிகள் மோதி வரும் போட்டியில் ஒரு புதிய மைல் கல்லை பதித்துள்ளார்.

இந்த போட்டியில் விளையாடிய புஜாரா இந்திய மண்ணில் நடந்த  முதல் தர கிரிக்கெட் தொடர்களில்  12000 ரன்கள் கடந்து  சாதனை படைத்துள்ளார், இந்த சாதனையை  தனது 145 வது போட்டியில் புஜாரா பதிவு செய்துள்ளார்.இதுவரை புஜாரா 240 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 18000 ரன்களுக்கு மேல் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணிக்கு 98 போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா 15783 பந்துகளை விளையாடி 7014 ரன்களை 44.39 சராசரியுடன்  அடித்துள்ளார், இதில் மொத்தமாக 3 இரட்டை சதங்கள், 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடக்க விருக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 வெற்றிகளை பெற்று ஆகா வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்த வெற்றியை இந்திய அணி அடைய செதேஷ்வர் புஜாரா முக்கிய காரணமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.