35 வது பிறந்தநாள் காணும் இந்தியாவின் ‘தி நியூ வால்’ செதேஷ்வர் புஜாரா ! சாதனைகள் ,பயணங்கள் ஒரு பார்வை ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 23, 2023 & 10:11 [IST]

Share

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத தூணாக சமீப காலத்தில் அசத்தி வரும் அணியின் முன்னணி வீரர் செதேஷ்வர் புஜாரா விரைவில் தனது 35-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.தனது அசாத்திய பேட்டிங்கால் இந்திய டெஸ்ட் அணியின் காப்பானாக விளங்கும் புஜாரா படைத்த சாதனைகள் பற்றி காண்போம்.  

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் வீரர்கள்  அனைவரின் கனவாக இருக்கும், அதற்காக கடினமாக உழைப்பார்கள் ஆனால் அனைவராலும் டெஸ்ட் தொடரில் இடம் பெற முடியாது அப்படியே இடம் பெற்றாலும் தொடர்ந்து அந்த தொடரில் நிலைக்க முடியாது ஏனென்றால் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பொறுமையும் நிதானமும் பெரிய அளவில் வேண்டும்.இவை இரண்டும் இருக்கும் ஒரு சில வீரர்கள் தான் மிக சிறந்த டெஸ்ட் தொடர் ஜாம்பவான்களாக வரலாற்றில் இடம் பெறுவார்கள்.

அந்த வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின்  ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் உடைய அடுத்த வாரிசாக கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என அனைவராலும் கொண்டாடப்படும் செதேஷ்வர் புஜாரா இந்திய அணிக்காக பல தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

செதேஷ்வர் புஜாரா வின் தொடக்கம் : 

இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனாக விளங்கும் புஜாரா குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஜனவரி 25 1988 ஆம் ஆண்டு பிறந்தார். தனது கிரிக்கெட் பயணத்தை உள்நாட்டு தொடர்களில் சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கி விளையாட தொடங்கி ஆரம்பித்தார்.

அதன்பின் 2005 ஆம் ஆண்டு இந்திய அண்டர் 19 டெஸ்ட் அணியில் இடம்பெற்ற புஜாரா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 211 ரன்களை  குவித்து  அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

அடுத்தாக 2006 ஆம் ஆண்டும்  அண்டர்-19 டெஸ்ட் அணியில் இடம்பெற்று அந்த தொடரில் 349 ரன்களை குவித்து அந்த தொடரின் நாயகன் விருதை பெற்று அசத்தினார். அந்த தருணத்தில் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால  முன்னணி  டெஸ்ட் வீரராக புஜாரா இருப்பார் என்று எத்தனை நபர்கள் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.   

இந்திய அணியில் கால் பதித்த தருணம் : 

இந்திய அணிக்காக செதேஷ்வர் புஜாரா சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2010ஆம்  ஆண்டு களமிறங்கினார், தனது சர்வதேச முதல் டெஸ்ட் சதத்தை  2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்தார்.அதேபோல் 2013 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய புஜாரா இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.அதன்பின் தனது திறனை உணர்ந்த புஜாரா டெஸ்ட் தொடரில் முழு உழைப்பையும் அளித்து தற்போது இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்குகிறார்.     

ஒரு சில சாதனை துளிகள்   : 

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த டிராவிட் என்று அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் தொடரில் அளித்து வரும் புஜாராவின் சாதனை துளிகள்.

1) டெஸ்ட் போட்டியில் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 206* அடித்தது தான் புஜாராவின் அதிகபட்ச டெஸ்ட் ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

2)  இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் புஜாரா தான், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு 525 பந்துகளை சந்தித்து 202 ரன்களை அடித்த போது இந்த சாதனையை படைத்தார்.

3)  புஜாராவின் கிரிக்கெட் பயணத்தில் 2017 ஆம் ஆண்டு தான் முக்கியமான ஆண்டாக இருந்தது, அந்த ஆண்டில் 4 சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 1140 ரன்கள் அடித்து அசத்தினார். 

4) புஜாரா டெஸ்ட் போட்டியில் வெறும் 18 இன்னிங்ஸில் வேகமாக 1000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

5) புஜாரா மற்றும் முரளி விஜய் ஜோடி இணைந்து 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 370 ரன்களை குவித்தார்கள், இது டெஸ்ட் கிரிக்கெட்டில்  2 வது விக்கெட்டுக்கு இந்தியாவின்  அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக பதிவானது.

6) புஜாரா டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்கள் கடந்த 8 வது இந்திய பேட்ஸ்மேன் என்ற மெயில் கல்லை அண்மையில் அடைந்தார்.  

7)  முதல் தர கிரிக்கெட் தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் புஜாரா அண்மையில் ரஞ்சி கோப்பையில் விளையாடிய போது முதல் தர கிரிக்கெட்டில் 12000 ரன்கள் கடந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிராவிடின் வாரிசு புஜாரா :

இந்திய டெஸ்ட்  அணியின் தூணாக பல ஆண்டுகள் இருந்து சாதனைகளைப் படைத்து வந்த டிராவிட்டுக்கு  பிறகு யார் டெஸ்ட் அணியில் அந்த இடத்தை  நிரப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் டிராவிட் தனது ஓய்வை அளித்த 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அவரின் இடத்தில் களமிறங்கி நியூசிலாந்து அணிக்கு எதிராக 159 அடித்து தனது நிலையை அனைவருக்கும்  நிரூபித்தார் புஜாரா, அதன்பின் இன்று வரை இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு  காப்பானாக புஜாரா விளங்கி வருகிறார் என்று கூறினால் மிகையில்லை.

கப்பா டெஸ்ட் வெற்றி : 

இந்திய அணி 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் கப்பா டெஸ்ட் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது,  இதற்கு முக்கிய பங்காற்றியவர் புஜாரா தான், இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த பொழுது ஒரு ஆலமரம் போல் கம்பீரமாக ஆஸ்திரேலியா அணியின் பௌலிங்கை சமாளித்து 211 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.    

டெஸ்ட் நாயகனுக்கு வாழ்த்து : 

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் செதேஷ்வர் புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதம் ,19 சதம் மற்றும் 34 அரைசதம் உட்பட 7014 ரன்களை இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் 35 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் செதேஷ்வர் புஜாரா இந்திய அணிக்காக இதுவரை அளித்த பங்களிப்பு, படைத்த சாதனைகள் இனி படைக்கவிருக்கும் சாதனைகள்  என அனைத்திற்கும் நன்றி கூறி தங்கள் வாழ்த்துக்களை இந்திய அணியின் ரசிகர்கள் உட்பட பலர் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.