ஐ.பி.எல் 2023: மும்பை அணிக்கு வந்த சோதனை..! முக்கிய ஆல்ரவுண்டர் காயத்தினால் விலக வாய்ப்பு..?

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 29, 2022 & 15:00 [IST]

Share

ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய பொழுது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து அவர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பாரா என்ற நிலை உருவாகியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும் பல கோடிகள் கொடுத்து முன்னனி வீரர்களை தங்கள் அணிக்காக வாங்கினார்கள்,குறிப்பாக ஆல்ரவுண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டனர்.

மும்பை அணியும் தங்கள் அணிக்கான ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை போட்டிபோட்டு வாங்கியது.மேலும் மும்பை நிர்வாகமும் ரசிகர்களும் தங்கள் அணிக்கு ஒரு புதிய திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

அந்த மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் அண்மையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கிரீன் 5-விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

அதனை அடுத்து அதே போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக பேட்டிங் செய்யக் களமிறங்கிய கேமரூன் கிரீன் தென்னாப்பிரிக்கா பௌலர் அன்ரிச் நார்ட்ஜே வீசிய பந்தில் கையில் காயம் ஏற்பட்டு போட்டிக் களத்தை விட்டு வெளியேறினார்,பின்பு இறுதியாகக் களமிறங்கி அந்த காயத்துடன் விளையாடி அரைசதமும் அடித்தார்.

அதன்பின் கேமரூன் கிரீனை பரிசோதித்த மருத்துவர் குழு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது, எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

ஆஸ்திரேலியா மண்ணில் நடந்து வரும்  பிக்பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக கிரீன் விளையாடி வந்தார்,இந்த காயத்தினால் அந்த தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு  நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக முழு உடல் தகுதியுடன் விளையாட வேண்டும்  என்பதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டாகக் கூறப்படுகிறது.

மும்பை அணி எதிர்பார்ப்பது கிரீனின் காயம் முழுமையாகக் குணமாகி அவர் ஐ.பி.எல் தொடரில் முழுத்திறனுடன் பங்கேற்க வேண்டும் என்பது தான், அவரின் காயம் முழுமையாகக் குணமாகவில்லை என்றால் அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்படும் என்பதால் ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகம் சோகத்தில் உள்ளனர்.