பிக்பாஷ் 2022-2023 : மைக்கேல் நெசரின் அதிரடி ஆட்டம் மழையால் வீணானது…! ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஷ் லீகின் 28-வது போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் விளையாடினார்கள்.இந்த போட்டி மழையின் காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது.
இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்க தாமதமானதால் போட்டியின் ஓவர்கள் குறைக்கபட்டு இரு அணிகளும் 13 ஓவர்கள் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.அதன் பின் போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிரவுன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்,மற்றொரு வீரரான கொலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 38(14) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் உடனுக்குடன் ஆட்டமிழந்தார்கள்.
இறுதியாக ஜோடி சேர்ந்த நாதன் மெக்ஸ்வீனி மற்றும் மைக்கேல் நெசர் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்,அதிரடியாக விளையாடிய மைக்கேல் நெசர் 45*(18) ரன்களை அடித்து விளாசினார். பிரிஸ்பேன் ஹீட் அணி 13 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை பதிவு செய்தது.
அடுத்தாக இரண்டாவது இன்னிங்சில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது, அதன் பிறகு மழை விடாது பெய்ததால் போட்டியை ரத்து செய்து இரு அணிகளுக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் கண்டிப்பாக இரு அணிகளுக்கு இடையில் அதிரடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,மழையினால் போட்டி பாதியில் ரத்தாகி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.