Big Bash League 2022-23 : மேடின்சனின் மிரட்டல் ஆட்டத்தில் சரணடைந்தது பிரிஸ்பேன் ஹீட் அணி!!
Big Bash League 2022-23 : ஆஸ்திரேலியா உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடரான பிக்பாஷ் லீக் சீசன்-12 தொடங்கி இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று நடந்த 3-வது போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் காஸாலி மைதானத்தில் விளையாடினார்கள்.
இந்த போட்டியில் வானிலை சற்று மோசமாக இருந்ததால் தாமதமாகப் போடப்பட்ட டாஸை வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் ஜிம்மி பீர்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான சாம் ஹார்பர் 21(15) ரன்களை மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான அணியின் கேப்டன் நிக் மேடின்சன் பொறுப்பாக விளையாடினார்.
அதன்பின் அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணியின் வீரர்கள் ஜேக் ஃப்ரேசர், ஆரோன் பின்ச் மற்றும் ஜொனாதன் வெல்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்பு ஜோடி சேர்ந்த மேடின்சன் மற்றும் ரசல் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
இந்நிலையில் 20-ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 166 ரன்களை பதிவு செய்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் நிக் மேடின்சன் 10-பௌண்டரிகள் மற்றும் 3-சிக்ஸர்கள் உட்பட 87(49) ரன்களை அடித்து அணிக்குப் பக்கபலமாக இருந்தார். பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் மேத்யூ குஹ்னெமன் 3-விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்தாக 167-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் மேக்ஸ் பிரையன்ட் மற்றும் ஜோஷ் பிரவுன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்பு நிதானமாக விளையாடிய அனுபவ வீரர் கொலின் மன்றோ 35(30) எடுத்து ரன் அவுட் ஆனார். இந்நிலையில் சற்று அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் ஜிம்மி பீர்சன் 43(30) எடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் இறுதிவரை போராடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் வீர்ரகள் 20-ஓவர்களில் வெறும் 144 ரன்களை மட்டும் எடுத்த நிலையில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் அகேல் ஹொசின் 3-விக்கெட்களை சாய்த்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதைச் சிறப்பாக விளையாடி தனது அணியின் வெற்றிக்கு வழிசெய்த நிக் மேடின்சன் தட்டிச் சென்றார்.