ஐ.பி.எல் 2023 தொடரில் மாற்றம் ..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் காரணமாக பிசிசிஐயின் அடுத்த முடிவு என்ன..?

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 07, 2022 & 15:10 [IST]

Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு  இந்திய அணி செல்ல இன்னும் வாய்ப்பு உள்ளது என்ற செய்தி இந்திய அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 2019-யில் ஆரம்பித்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரைப் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்தது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-2023) இறுதிப் போட்டியில் விரைவில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடக்க உள்ளது.

தற்போதைய நிலையில்  கிரிக்கெட் டெஸ்ட் அணிகளின் வெற்றிகள் அடிப்படையில், முதல் நான்கு இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா ஆகும். இந்நிலையில் இந்திய அணி அடுத்தாக வங்கதேச அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் அதன் பின், ஆஸ்திரேலியா அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது உறுதி.

இந்நிலையில் 2023 வருடத்திற்கான ஐ.பி.எல் போட்டியும் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 31-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த  ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடனே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கும். இந்திய இறுதிப் போட்டிக்குத் தகுதி பெரும் நிலையில் இருக்கும் பொழுது, இந்திய அணி வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டியின் முடிவிற்குப் பிறகு கண்டிப்பாக உடல் சோர்வு ஏற்படும். அதனால் மாற்று ஏற்பாட்டிற்கான ஆலோசனையில் உள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

 

ஐ.சி.சி தொடர்களின் உலகக்கோப்பையை இந்தியா அணி வென்று பலவருடங்கள் ஆன நிலையில், இந்த வாய்ப்பை அவ்வளவு எளிதாக பிசிசிஐ எடுத்துக் கொள்ளாது. எனவே 2023 ஐ.பி.எல் தொடரை முன்னதாகவே முடிப்பதற்காக பிசிசிஐ  ஆலோசனை செய்து வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஐ.பி.எல் 2023 தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில் பிசிசிஐ புதியமுறையில் போட்டியை நடத்தி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் வருடமாக வரும் 2023 ஆம் ஆண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பல ஐ.சி.சி  கிரிக்கெட் தொடர்கள் 2023 ஆண்டில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி அனைத்திலும் சாதிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.