ரோஹித், கோலிக்கு டி20யில் கல்தா.. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. இந்தியா நியூசிலாந்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையிலும் விளையாட உள்ளது.
இதில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு இடம் வழங்கப்படவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம் பெறாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியிலும் ரோஹித் மற்றும் விராட் சேர்க்கப்படவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியா தலைமையேற்க உள்ளார். இதனால் டி20 போட்டிகளில் மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பார்டர்-கவாஸ்கர் தொடரின் மூலம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷானும் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக கேஎல் ராகுல் & அக்சர் படேல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும், ராகுல் மற்றும் அக்சர் இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அஸ்ஸாமுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் 379 ரன்கள் எடுத்த பிருத்வி ஷா, அதற்கு பரிசாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேச தொடருக்கான அழைப்பை பெற்றுள்ளார். அதே நேரத்தில் கே.எஸ்.பரத் நியூசிலாந்திற்கான ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து ஓய்வில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, உடற்தகுதிக்கு உட்பட்டு டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தேவையான தகுதியை இன்னும் பூர்த்தி செய்யாததால் அவரும் சேர்க்கப்படவில்லை.
அதே சமயம் அனைத்து அணிகளில் இருந்தும் சஞ்சு சாம்சன் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
முழு அணிகள்:
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (வி.கே.), இஷான் கிஷான் (வி.கே), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா , முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்.