பிக்பாஷ் லீக் சீசன் 12: விறுவிறுப்பான முதல் போட்டியில் சிட்னி தண்டர் அணி திரில் வெற்றி..!

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 13, 2022 & 19:30 [IST]

Share

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சார்பாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்நாட்டு டி-20 தொடர்களில் முக்கிய தொடராகக் கருதப்படும் பிக்பாஷ் லீக்கின் 12-வது சீசன் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மனுகா ஓவல் மைதானத்தில் மோதினார்கள்.

கடந்த இரண்டு  பிக்பாஷ் லீக் சீசன்கள் கொரோனா கட்டுப்பாட்டினால் முழுமையாக நடைபெறமுடியாமல் போன நிலையில், இந்த வருட பிக்பாஷ் லீக் முழுமையாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி கேப்டன் ஜேசன் சங்கா பௌலிங் தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் வீரர்கள் சிட்னி தண்டர் அணியின் பௌலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20-ஓவர்கள் முடிவில் வெறும் 122 ரன்களையே அடித்தனர். அதிகபட்சமாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் நிக் லார்கின் 25(26) எடுத்தார். சிட்னி தண்டர் அணி சார்பில் குரிந்தர் சந்து, ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் டேனியல் சாம்ஸ் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்தாக பேட்டிங் செய்யக் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி தொடக்க வீரர்கள் மேத்யூ கில்க்ஸ் மற்றும் ரிலீ ரோசோவ் ஆகிய இருவரும் டிரெண்ட் போல்டின் ஸ்விங் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார்கள். அதன் பின்னர் வந்த வீரர்கள் ஜேசன் சங்கா மற்றும் அலெக்ஸ் ரோஸ் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று ஏத்தினார்கள். 

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் சிறந்த பௌலிங் மூலம் 9 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இறுதி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் 19.4 ஓவரில் ஆட்டம் டை ஆனது. இந்நிலையில் இந்த போட்டியின் இறுதி பந்தில் சிட்னி தண்டர் அணியின் வீரர் குரிந்தர் சந்து ஒரு ரன் எடுத்து தனது அணிக்கு  வெற்றியை பெற்று தந்தார்.

இந்த போட்டியில் தனது அணிக்கு பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்த சிட்னி தண்டர் அணியின்  குரிந்தர் சந்து அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.