ஆசிய கோப்பை விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் எச்சரிக்கை..!!

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அரசியல் பிரச்சனைகளால் பாகிஸ்தான் மண்ணில் நடக்க உள்ள ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து அண்மையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தியா பாகிஸ்தான் மண்ணில் சில ஆண்டுகளாக எந்த வித தொடரிலும் பங்கேற்காமல் இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் நிலை குறித்து சர்ச்சை கருத்துக்கள் எழுந்தது இதை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்று பேச்சு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கலந்து கொண்டார், அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் ஜெய் ஷா தங்கள் நாட்டின் அரசாங்கம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட அனுமதி அளிக்கவில்லை என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்கள் நாட்டில் எந்த பிரச்சனைகளும் மற்றும் அச்சுறுத்தல்களும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் வேறு இடத்தில் போட்டியை நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதன்பின் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் செதி இந்தியா ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை என்றால் இந்திய மண்ணில் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் கண்டிப்பாக பங்கேற்காது என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை தொடர் குறித்து எந்த முடிவும் எடுக்க படாத நிலையில் வரும் மார்ச் மாதம் மற்றொரு கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று ஆசிய கோப்பை நிர்வாக குழுவினர் அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்த வரையில் பாகிஸ்தான் மண்ணில் எந்த வித தொடரில் பங்கேற்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.