எம்.எஸ்.தோனி வழியில் ஹர்திக் பாண்டியா கலக்குகிறார்..! அஸ்வின் புகழாரம்..!

இந்திய அணி இலங்கை எதிராக டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது,இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அசத்தி வருகிறார்.கடந்த டி 20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.
இந்திய அணியை பொறுத்த வரையில் மூன்று விதமான தொடர்களுக்கு பெரும்பான்மையாக ஒரே கேப்டன் தான் வழி நடத்தி வந்துள்ளார்கள்,ஆனால் அண்மையில் வெளிவந்த செய்தி படி வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு டி20 தொடர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என தனித்தனியாக கேப்டன் களை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கிரிக்கெட் வட்டாரங்களில் பரவி வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அண்மையில் அளித்த பேட்டியில் வரும் 2024 உலக கோப்பை தொடருக்காக புதிய இளம் வீரர்களை கொண்ட டி20 அணியை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனை கேட்ட ரசிகர்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலர் இனி டி20 போட்டிகளில் ரோகித்,கோலி போன்ற முன்னணி வீரர்கள் களமிறங்க வாய்ப்பில்லை என்று தங்களின் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய அணியின் அசத்தல் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில் பாண்டியா மிகவும் திறமைசாலி என்பது நன்றாகவே தெரியும்,ஆனால் களத்தில் அவர் கேப்டனாக மிகவும் கூலாக செயல்படுகிறார்.அவர் இளம் வீரர்களை நன்றாக கையாளுகிறார் இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தான் நினைவுக்கு வருகிறார் என்றார்.மேலும் வரும் போட்டிகளில் ஹர்திக் கேப்டன் பொறுப்பில் எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார் அஸ்வின்.