ரிஷப் பண்டுக்கு பதிலாக.. டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்.. இந்த 5 பேரில் ஒருவருக்கு தான் சான்ஸ்?

Representative Image. Representative Image.

By Sekar Published: January 02, 2023 & 12:21 [IST]

Share

டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்த போதிலும், கண்ணாடியை உடைத்து தப்பினார். அவர் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல், பிசிசிஐ ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பண்டின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டது. அதில் ரிஷப் பண்டின் நெற்றியில் இரண்டு காயங்கள், வலது முழங்காலில் தசைநார் காயம், வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரல் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

இந்த காயங்கள் குணமடைய அதிக காலம் எடுக்கும். மேலும் அறிக்கைகளின்படி, அவர் முழுமையாக குணமடைந்து வர மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படும். இதனால் 2023 ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பை 2021 சீசன் முதல் அவர் செய்து வருகிறார். இந்நிலையில் 2023 ஐபிஎல் சீசன் தொடங்கும் முன் அவர் குணமடைய வாய்ப்பில்லை என்பதால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு புதிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டரை நியமிக்க வேண்டும். விக்கெட் கீப்பரை பொறுத்தவரை இங்கிலாந்தின் பிலிப் சால்ட் எனும் மாற்று வீரர் அணியில் உள்ளார். 

இவர் அனுபவம் குறைந்த வீரர் என்றாலும், 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றதோடு, இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். 

அதே சமயம் கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தான் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்புள்ள சிலரை இதில் பார்க்கலாம்.

டேவிட் வார்னர்

ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக பண்டுக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு குறிப்பிடத்தக்க ஐபிஎல் அனுபவம் உள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்தார்.

பிருத்வி ஷா

ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ள மற்றொரு வீரர் இந்திய U-19 அணியின் முன்னாள் கேப்டன் ப்ரித்வி ஷா. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்தார். விஜய் ஹசாரே டிராபியை வென்று 2021-22 சீசனில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு அவர்களை வழிநடத்தினார்.  2018 ஆம் ஆண்டு U-19 கேப்டனாக உலகக் கோப்பையை வென்றார்.

மணீஷ் பாண்டே

ஐபிஎல் 2023 மினி ஏலத்தின் போது மனிஷ் பாண்டேவை டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த வாரம் ரூ.2.4 கோடிக்கு வாங்கியது. கர்நாடகாவின் கேப்டனாக உள்ள அவரது குறிப்பிடத்தக்க உள்நாட்டு கிரிக்கெட் அனுபவம் மற்றும் அவரது தலைமையிலான அணி பல பட்டங்களை வென்றதன் காரணமாக, ஐபிஎல் 2023 இல் டிசி கேப்டனாக அவர் ஒரு ஆச்சரியமான தேர்வாக இருக்கலாம். டெல்லி கேபிடல்ஸின் 15 ஐபிஎல் சீசன்களிலும் பங்கேற்ற ஒரே வீரர் அவர் என்பதால் தேவைப்பட்டால் அவருக்கு பொறுப்பு வழங்கப்படலாம். .

மிட்செல் மார்ஷ்

மார்ஷ், பிரித்வி ஷாவைப் போல, ஐபிஎல் அணியை ஒருபோதும் வழிநடத்தியதில்லை. ஆனால் அவர் ஐபிஎல் 2023 இல் கேப்டனாக அறிமுகமாகலாம். 31 வயதான ஆல்-ரவுண்டர் மார்ஷ் ஆஸ்திரேலியா U-19 அணியை கேப்டனாக வழிநடத்தில் 2010 இல் பட்டம் வென்றார். அத்துடன் ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் அணிகளை வழிநடத்திய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

யாஷ் துல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய U-19 அணிக்கு யாஷ் துல் கேப்டனாக இருந்தார். ரிஷப் பண்ட் ஐபிஎல் 2023 ஐ இழக்க வாய்ப்புள்ளதால், யாஷ் துல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்த நியமிக்கப்படலாம், இருப்பினும் அவர் ஐபிஎல் 2022 இல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதால், யாஷ் துல் இறுதி வாய்ப்பாக மட்டுமே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.