மூன்றாவது போட்டியும் மழையால் ரத்து.. ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 30, 2022 & 18:52 [IST]

Share

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. இதில் டி-20 தொடரை ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வென்றது.

அடுத்ததாக ஒருநாள் போட்டிகளை ஷிகர் தவான் தலைமையில் எதிர்கொண்ட இந்தியா அணி முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வியைத் தழுவியது. இரண்டாவது போட்டி மழையால் ரத்ததான நிலையில், இன்று நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுத் தொடரை நியூசிலாந்து அணியுடன் சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி  கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இருக்கும்  ஹாக்லி ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பின்பு நிதானமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 49(59) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தது களமிறங்கிய இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், சூரியகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பின்பு மிகவும் நிதானமாக ஆடிய இளம் வீரர் வாசிங்டன் சுந்தர் 51(64) அரைசதமடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக  இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  219 ரன்களை பதிவுசெய்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஆடம் மில்னே மற்றும்  டேரில் மிட்செல்  தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். டிம் சௌதீ 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்பு இரண்டாவது பேட்டிங் செய்யக் களமிறங்கிய நியூசிலாந்து அணி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் போட்டியை எதிர்கொண்டனர். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான பின் ஆலன் 57(54) ரன்களை எடுத்த உம்ரன் மாலிக் பௌலிங்கில் ஆட்டமிழந்தார்.

அடுத்தாக  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டெவோன் கான்வே ஜோடி சேர்ந்து  களத்தில் விளையாடத் தொடங்கினர். அப்பொழுது மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்பு மழை தொடர்ந்து நிற்காமல் பெய்து வந்ததால்  போட்டியை மறுபடியும் தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் முறையில் போட்டியின் முடிவை அறிவிக்கலாம் என்று பார்த்தால் அதற்கு 20-ஓவர்கள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு 18-ஓவர் முடிவிலேயே மழையால் போட்டி நின்றது. இதனால் வேறு வழியில்லாமல் இந்த போட்டி ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஒருநாள் தொடரை 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்டநாயகன் விருது நியூசிலாந்து வீரர் டாம் லாதமுக்கு அளிக்கப்பட்டது. இதற்கு முந்தைய போட்டியும் மழையால் ரத்தானதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவுகிறது என்றே கூறலாம்.    
 
இதற்கு இடையில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில் இந்தியா அணி அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்தாக ஓய்வில் இருக்கும் முன்னணி வீரர்களோடு இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக அங்குச் சென்று  மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில்  விளையாடவுள்ளது.