அனைத்து அணிகளும் வாங்க போட்டி போடும் வீரர் இவர் தான்.. கட்டியம் கூறும் அஸ்வின்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 05, 2022 & 17:22 [IST]

Share

ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெற உள்ளது. மேலும் அணிகள் எந்தெந்த வீரர்களை எடுப்பார்கள் என்ற விவாதம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அனைவரின் பார்வையும், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில், இங்கிலாந்து கோப்பை வெல்ல காரணமாக இருந்து, தொடர் நாயகன் விருது வென்ற சாம் கர்ரன் மீது தான் உள்ளது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து அணிகளாலும் தேடப்படும் வீரராக இருப்பார் என்றும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கருதுவதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பையில் ஸ்டோக்ஸ் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றதற்காக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறுவதில் முக்கிய பங்கு வகித்தார். 138 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து பேட்டிங் நொறுங்கிய நிலையில், ஸ்டோக்ஸ் ஒரு முனையில் நிதானமாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவர் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை முடித்தார்.

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மாதிரியான இரண்டாவது விக்கெட் கீப்பரை ஏலத்தில் எடுக்கக் கூடும் என்றும் அஸ்வின் கருதுகிறார். சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ் அல்லது கேமரூன் கிரீன் ஆகிய எந்த ஒரு ஆல்-ரவுண்டர்களையும் சிஎஸ்கேவால் வாங்க முடியாவிட்டால், இதை தான் முயற்சி செய்வார்கள் என மேலும் கூறினார்.