ரஞ்சி கோப்பையில் பிரித்வி ஷா அதிரடி..! பல சாதனைகளை படைத்து அசத்தினார்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 11, 2023 & 13:32 [IST]

Share

இந்தியாவின் முக்கிய முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பையில் மும்பை மற்றும் அசாம் அணிகள் மோதிவரும் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரர்  பிரித்வி ஷா புதிய சாதனையை படைத்தார்,தனது சிறப்பான ஆட்டத்தால் ரஞ்சி கோப்பை வரலாற்றில் இடம் பிடித்தார்.

இந்த ரஞ்சி கோப்பை தொடரில் அசாம் மற்றும் மும்பை அணிகள் விளையாடிய போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி பௌலிங்கை தேர்வு செய்தது,இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் நாள் முடிவில் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் போட்டியில் பிரித்வி ஷா 240 ரன்களுடன் மற்றொரு வீரர் ரஹானே 73 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர், நேற்று விட்ட இடத்திலிருந்து அசத்தல் ஆட்டத்தை தொடங்கிய பிரித்வி ஷா முச்சதம் அடித்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

இந்த போட்டியில் பிரித்வி ஷா 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 379(383) ரன்களை பதிவு செய்து, இறுதியாக அசாம் வீரர் ரியான் பராக் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.இவரின் இந்த ஆட்டம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முக்கிய பதிவாக இடம்பெற்றது.இந்தியாவின் முதல் தர போட்டிகள் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தனிநபர்  ஸ்கோராக பிரித்வி ஷாவின் 379(383) இன்னிங்ஸ் இடம்பெற்றது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா அணிக்காக (1948-1949) ஆண்டு பி.பி.நிம்பல்கர் 443 ரன்களை அடித்த இன்னிங்ஸ் பதிவாகி உள்ளது.இதனை பிரித்வி ஷா முறியடிப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில் 379 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் 23-வயது இளம் வீரரான பிரித்வி ஷா அடித்த 379(383) ரன்கள்  மும்பை அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக பதிவாகி சாதனை படைத்துள்ளது, இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக  அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக சஞ்சய் மஞ்சரேக்கர் அடித்த 377* ரன்கள் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அண்டர்-19 அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி கோப்பையை பெற்று தந்த பிரித்வி ஷா, இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு சரியான பங்களிப்பை அளிக்க முடியாமல் காயம் காரணமாக வெளியேறினார்.

அதன்பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை இந்த தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை நிரூபித்து இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனத்தை கண்டிப்பாக ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.